கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் சில நடுகற்கள், இன்று தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள் என்கிற புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, தமிழகத் தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் இணைந்து மேற்கொண்ட மீளாய்வில்தான், தமிழகத்தில் முதன்முறையாக அரச சின்னங்களோடு கூடிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு குறித்து கோவிந்தராஜ், தமிழ்செல்வன், பென்னேஸ்வரன் உள்ளிட்ட ஆய்வாளர்களிடம் பேசியபோது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
தொகரப்பள்ளி சாணாரப்பன் மண்டபப் பகுதியில் உள்ள நடுகற்கள் குறித்து ஆய்வாளர்கள் ஏற்கனவே ஆய்வு செய்திருந்தனர். அப்போது அங்கிருந்த மூன்று கல்வெட்டுகள், 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரியவந்தது.
அந்தக் கல்வெட்டுகள் கூறிய தகவலின்படி, “விளம்பி” வருடம் மார்கழி மாதம் 27-ம் தேதி நடைபெற்ற ஒரு ஊரழிவுச் சண்டையில் உயிரிழந்த வீரர்களுக்காக இந்த நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.



