சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியை சேர்ந்த 157 மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை மாநகராட்சியில் தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சங்கரிடம் பேசினோம், ‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி ஒரு மாமன்ற உறுப்பினர் தேர்வானவுடன் 90 நாள்களுக்குள் தன்னுடைய மற்றும் தன் குடும்பத்துடைய சொத்து மதிப்பை மாநகராட்சியில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகும் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும். இது விதிமுறை. இதைக் கருத்தில் கொண்டே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலை கேட்டேன். கடந்த மார்ச் மாதம் தகவல் வேண்டி விண்ணப்பித்தேன்.
தேர்தல் காரணமாக கொஞ்சம் காலதாமதமாக மே மாதம்தான் எனக்கு இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டது. அதன்படி சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உட்பட 157 உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவே இல்லை. இருக்கிற 200 உறுப்பினர்களில் 157 உறுப்பினர் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது உள்ளாட்சி அமைப்பின் சட்டத்திட்டங்களை துச்சமாக மதிப்பதன் விளைவே. சட்டத்திட்டங்களை கடந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் தங்களின் நேர்மையை நிரூபிக்க சொத்துக் கணக்கை தாக்கல் செய்வது தார்மீக பொறுப்பும் கூட. இத்தனை பேர் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய தயங்குகிறார்கள் எனில், இவர்களை முறையாக சட்டத்தின் முன் நிறுத்தி விசாரித்தால் நிறைய அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவரும்’ என்றார்.




