தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோவில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா – உலகம்மனின் திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது.
தென்காசி நகரில் வரலாற்று சிறப்புமிக்கதும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறும்.
இதே போன்று இந்த ஆண்டிற்கான ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 30-ஆம் தேதி அன்று உலகம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவில் தினமும் மாலை கோவிலில் இருந்து அம்பாள் பூங்கோயில் வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், பல்லக்கு சயனம் வாகனம், கிளி வாகனங்களில் எழுந்தருளி ரத வீதி உலாவும், திருவிழாவின் முக்கிய நாளான இன்று காலை உலகம்மனின் திருத் தேரோட்டம் நடந்தது. முன்னதாக கோவிலில் இருந்து அதிகாலை உலகம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் இதனைத் தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்ததும் தேர் நிலையில் நிறுத்தப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நாளான வருகிற 9-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு தெற்குமாசி வீதியில் வைத்து உலகம்மனுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் தபசு காட்சி நடைபெறுகிறது. அன்று இரவு கோவிலில் வைத்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
காசி விஸ்வநாத சுவாமி கோவிலின் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.
இன்று நடைபெற்ற திருத்தேரோட்ட நிகழ்வில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர், நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எஸ்.சுப்பையா, அருள்மிகு சுப்பிரமணிய சாமி அறங்காவலர் குழு தலைவர் இசக்கிரவி, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
More Stories
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கேப்டன்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை
கண்டித்த முதல்வர் , மன்னிப்பு கேட்ட தர்மபுரி எம்.பி செந்தில் குமார்