June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டத்தில் கல்வி, குடிநீர் பொதுசுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறினார்

தென்காசி மாவட்டத்திற்கு முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் பொறுப்பேற்றப் பின்னர் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது , மிகவும் எளிமையாக , சகஜமாக உரையாடல்களை துவங்கிய ஆட்சியர் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் கலப்பில்லாமல் உரையாடினார்

அருண் சுந்தர் தயாளன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். முதல் கூட்டம் 25ம் தேதி திங்கள் கிழமை காலை 11 மணிக்கு தென்காசி ரயில்வே சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் பாரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிக்கு களப்பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக பணிக்கு 167 ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதர துறைகளுக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட இருக்கிறது. அரசாணை வெளியிட்டு பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை பணிகளை மாவட்டத்தில் உள்ள களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள்

தற்போது தற்காலிகமாக தென்காசி கோட்டாட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முதல் தளத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணி துவங்கப்படுகிறது. மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் பதிவாளர் அலுவலக கட்டிடப்பணி இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெற்று விடும். அதன் பின்னர் ஆட்சியர் அலுவலகம் அங்கே செயல்படும். கூட்டுறவு சங்க கிட்டங்கி பகுதியில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பணியாற்றுவர். அங்கு 4.6 கோடி ரூபாய் செலவில் கட்டிட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிக கட்டிடத்திற்கு அரசு மொத்தம் 5.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இவற்றில் ஆயிரப்பேரியில் அரசுக்குச் சொந்தமான 32 ஏக்கர் பரப்பளவில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அப்பகுதியிலேயே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் அமைய இருக்கிறது. இதற்கான பணிகள் அரசு ஒப்புதல் கிடைத்ததும் துவக்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, புறவழிச்சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு அணுகு சாலை அமைக்கப்படும்.

வருவாய்துறை தவிர இதர துறைகளுக்கான இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் பணிகள் துவங்கும். கேரளாவில் இருந்து அதிகளவில் மருத்துவ கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் புளியரை வழியே வாகனங்களில் கொண்டு வரப்பட்டு தென்காசி மாவட்ட பகுதியில் கொட்டப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும். தென்காசி-குற்றாலம் சாலையில் சாலையோரம் உள்ள புதர்கள் அகற்ற நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றாலத்தில் அடிப்படை பணிகள் மேம்படுத்தப்படும்.

தென்காசி மாவட்டத்தில் கல்வி, குடிநீர் பொதுசுகாதாரம் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்கள் குறுஞ் செய்தி, மற்றும் வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார் , வட்டாச்சியர்கள் ஹென்றி பீட்டர் அழகப்பராஜா ஆகியோர் உடனிருந்தனர்

About Author

error: Content is protected !!