June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எஸ் டி பி மாநில தலைவர் முபாரக்

டெல்லி இனக்கலவரம்- பிரதமர் மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும்: எஸ்டிபிஐ மாநில தலைவர்

டெல்லி இனக்கலவரம்- பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் பேட்டி

எஸ் டி பி மாநில தலைவர் முபாரக்

அரசமைப்பு விரோத சட்டமான சி.ஏ.ஏ.வுக்கு எதிரான ஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டம் எனும் பெயரில் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பெரும் இனக்கலவரத்தை ஆளும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நடத்தியுள்ளன.

நான்கு நாட்கள் நடந்த இனக்கலவரத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு கணக்கு சொன்னாலும், பலரையும் காணவில்லை என்று காவல்துறையினரிடமும், மருத்துவமனையின் பிணவறையிலும் அப்பகுதி மக்கள் தேடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டமிட்ட இனக்கலவரமானது வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்ட சங்பரிவார் குண்டர்களுடன், காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட கலவரம் என்பது குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கும்பலாக மக்களை அடித்துக் கொல்வதும், சொத்துக்களை சூறையாடுவதும் என்று, டெல்லி காவல்துறையினர் கலவரக்காரர்களுடன் இணைந்து பாரபட்சமாகவே நடந்துள்ளனர் என்பதை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழு கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்திய ஆய்வின் மூலம் அறிய முடிந்தது.

2002 குஜராத் இனக் கலவரத்தை முன்மாதிரியாகக் கொண்டே டெல்லி இனக் கலவரமும் நடத்தப்பட்டுள்ளது.

கலவரத்தில் துப்பாக்கிகளும், பெட்ரோல் குண்டுகளும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் மரணமடைந்தவர்களில் பலரும் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். அதேபோல் காயமடைந்தவர்களில் ஏராளமானோர் துப்பாக்கி குண்டுகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். வன்முறைக் கும்பலிடம் சர்வ சாதாரணமாக துப்பாக்கிகள் புழங்குவது என்பது மிகவும் ஆபத்தானது என்பதால் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கலவரங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கக்கூடிய, வெறுப்புப் பேச்சுக்களுக்கு உரியவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். ஆனால், இவர்களை கைது செய்வதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையானது நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் மெத்தனம் காட்டியே வருகிறது.

டெல்லி இனக்கலவரம் குறித்து உலகின் பல நாடுகளில் உள்ள பாராளுமன்ற அவைகளில் விவாதங்கள் நடைபெற்று, சிறுபான்மை மக்களை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கும் வேளையில், மத்திய பாஜக அரசோ அதுதொடர்பான விவாதத்தை பாராளுமன்றத்தில் நடத்தக்கூட அனுமதிக்க மறுக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க வேண்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்திற்கு வராமல் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உதாசீனப்படுத்தி வருகின்றார்.

ஆகவே, டெல்லி இனக்கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.

மார்ச் 09ல் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:

சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர்., என்.ஆர்.சி,யை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பொதுமக்களும் தன்னிச்சையாக ஆங்காங்கே தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தது.

ஆனால், கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தமிழக அரசு அது தொடர்பான விவாதத்தை கூட நடத்தவில்லை. இந்நிலையில் நாளை (மார்ச்.09) தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக கேரளா, மேற்கு வங்கத்தை போன்று வலுவான சட்டமன்ற தீர்மானத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.

ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்:

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக ஜனநாயக வழியில் எவ்வித இடையூறுமின்றி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை பொய் வழக்குகளை பதிவு செய்து வருவதோடு, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மிரட்டி வருகின்றது. ஜனநாயக உரிமைப்படி போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியதுதான் காவல்துறையின் கடமையே தவிர, போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதல்ல.

தமிழக முதல்வரை நாங்கள் சந்தித்து கோரிக்கை விடுத்தபோது கூட, காவல்துறை போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் எவ்விதத்திலும் அதனை தடுக்காது என தமிழக முதல்வர் உறுதியளித்திருந்தார். ஆனால், தமிழக காவல்துறை பொய்யான வழக்குகளை பதிவு செய்து போராட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே, தமிழக அரசு ஜனநாயக வழியில், தங்களது உரிமைக்காக, வாழ்வாதாரத்தை காப்பதற்காக நடத்திய போராட்டங்கள் மீதான அத்துனை வழக்குகளையும் வாபஸ்பெற வேண்டும். கூடங்குளம், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் முதல் தற்போதைய சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் வரையிலான அனைத்து போராட்ட வழக்குகளையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழகம் தழுவிய தொடர் தர்ணா போராட்டம்:

சி.ஏ.ஏ., என்.பி.ஆர். என்.ஆர்.சிக்கு எதிராக தொடர் போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் மார்ச் 06 முதல் மார்ச் 10ம் தேதி வரை, ‘எதிர்த்து நில் போராடு’ என்ற முழக்கத்துடன், தமிழகம் தழுவிய தொடர் தர்ணா போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொண்டு வருகின்றது. அரசமைப்பு விரோத சட்ட நடவடிக்கைகளை வாபஸ் பெறும்வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து போராடும். ஒருபோதும் பின்வாங்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த சந்திப்பின் போது மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி, மாநில பேச்சாளர்கள் சாகுல் ஹமீது உஸ்மானி,செய்யது அகமது சலபி, பேட்டை முஸ்தபா, மாவட்ட செயலாளர்கள் ஹயாத் முகம்மது,பர்கிட் அலாவுதீன், தொகுதி தலைவர் மின்னதுல்லா, துணைத்தலைவர் ஜெபா, சலீம்தீன், செயலாளர் புகாரி சேட் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

செய்தியாளர் நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!