March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கமல்ஹாசனுடன் சு.ஆ.பொன்னுசாமி

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கமலுக்கு சம்மன் தொழிலாளர்கள் அணி கண்டனம்

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

கமல்ஹாசனுடன் சு.ஆ.பொன்னுசாமி

“சட்டத்தை மதிக்கும் நம்மவரின் தொண்டர்கள், ரசிகர்கள் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்க காரணம் தெரியுமா…?
-நேரில் இருந்தவன் என்கிற முறையில்……. தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர்.

கடந்த வாரம் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து தொடர்பாக விசாரணை நடத்த  (03.03.2020) செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10.30மணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது அனைவரும் அறிந்ததே.

பிற அரசியல் கட்சி தலைவர்கள் போல் வழக்கறிஞர்கள் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவோ நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு கேட்காமல் நம்மவர் அவர்கள் எப்போதும் சட்டத்தை மதிப்பவர் என்பதால் நேற்றைய தினம் காலை 10.10மணிக்கெல்லாம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக முடிவு செய்திருந்தார்.

தலைவர் 10.10மணிக்கெல்லாம் வருவதால் கட்சி நிர்வாகிகள் நாங்கள் அனைவரும் 10.00மணிக்கெல்லாம் அங்கே வந்திருந்தோம். கமல்ஹாசன் அவர்கள் ஒரு பிரபலமான நடிகர் மட்டுமின்றி தலை சிறந்த அரசியல் கட்சி தலைவரும் கூட. ஆனால் அவர் வரும் போது உரிய பாதுகாப்பு வழங்கிட அங்கே எந்தவிதமான தடுப்பு வேலிகளும் போடாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம் ஏனெனில் நம்மவருக்கு சமீபத்தில் தான் காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்று மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டால் என்ன செய்வது என்கிற கவலையில் நாங்கள் இருந்தோம்.

அப்போதே காவல்துறையினரின் மெத்தனப் போக்கு எங்களை இன்னும் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்கவும், நம்மவரை பத்திரமாக உள்ளே அழைத்து சென்று திருப்பி அழைத்து வர வேண்டும் என உள்மனதை எச்சரிக்கை செய்ததோடு மனம் கூடுதலாக பதைபதைத்தது.

அதற்குள் விஐபிகளின் வாகனங்கள் சென்று நிற்கும் இடத்திற்கு நம்மவர் 10.15மணிக்கு காரில் வந்து இறங்கிய போது அங்கே பாதுகாப்பு பணியில் வழக்கமான காவலர்களை தவிர கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பத்திரிகை, தொலைக்காட்சி புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் என போட்டி போட்டு கொண்டு நம்மவரை படம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு முன்னேறி வர ஒருகட்டத்தில் அவர்கள் நம்மவரை கீழே தள்ளி விடும் சூழல் ஏற்பட்டது. அப்போதும் அங்கிருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர அவரை பாதுகாப்பாக உள்ளே அழைத்து செல்ல முயற்சி செய்யவில்லை. ஒருவழியாக கட்சி நிர்வாகிகள் நாங்களே அவரை பத்திரமாக ஆணையர் அலுவலக தரை தளத்திற்கு அழைத்து சென்றோம்.

அங்கும் அவரை பாதுகாப்போடு அழைத்து செல்ல காவலர்கள் எவரும் வரவில்லை. அத்துடன் மின்தூக்கியிலும் (லிப்ட்) ஆணையாளர் அலுவலக ஊழியர்கள் அதிகளவில் இருந்த காரணத்தால் தனது கால் வழியையும் பொருட்படுத்தாது மாடிப் படிக்கட்டுகள் வழியாக நம்மவர் இரண்டாவது தளத்திற்கு நடந்தே வந்தார்.

மேலும் விசாரணை அதிகாரியும் உரிய நேரத்திற்கு அழைக்காமல் சுமார் 20நிமிடங்கள் அவரை காக்க வைத்தே அழைத்தோடு சுமார் 2.30மணி நேரத்திற்கு மேல் விசாரணை என்கிற பெயரில் அவருக்கு நெருக்கடி கொடுக்க முயன்றுள்ளனர். காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட காரணத்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரையும், பழரசமும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதைக் கூட அவருக்கு கொடுக்க அனுமதிக்கப்படவில்லை.

அதன் பிறகு துணைத் தலைவர் டாக்டர்ஆர்.மகேந்திரன் அவர்களும், சட்ட ஆலோசகர் திரு. பாஸ்கர் அவர்களும் விசாரணை அதிகாரி அறைக்கு வெளியே இருந்த காவலர்களிடம் வாக்குவாதம் செய்த பிறகே தண்ணீரும், பழரசமும் கொடுக்க அனுமதித்தனர்.

விசாரணை மதிய உணவு நேரம் கடந்தும் நடைபெற்றதால் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் குவிந்து விட்டதாலும், தொண்டர்கள் கூட்டம் அதிகமாக கூடியதாலும் பெயருக்கு மட்டும் பாதுகாப்பு என்கிற பெயரில் கண்துடைப்பு நாடகத்தை காவல்துறையினர் நடத்தினர்.

இதுவே ஆண்ட, ஆளுங்கட்சி தலைவர்களாக இருந்திருந்தால் அவர்களின் தொண்டர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதால் காவல்துறையினர் அவர்களுக்கு ராஜமரியாதை செய்திருப்பர். ஆனால் நம்மவர் எப்போதும் சட்டத்தை மதிப்பவர், தனது தொண்டர்களும், ரசிகர்களும் சட்டத்தை மதிக்க வேண்டும் என நினைப்பவர். அதனாலேயே ஆர்ப்பாட்ட, சாலை மறியல் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் போராட்டங்களை நடத்தக் கூடாது என்று விரும்புபவர்.

எப்போதும், எதிலும் மக்கள் நலனைப் பற்றி மட்டுமே சிந்தித்து, சட்டத்தினை மதித்து நடக்கும் ஒரு அரசியல் கட்சி தலைவரை, கோடிக்கணக்கான ரசிகர்கள் விரும்பும் பிரபல நடிகரை நேற்று தமிழக காவல்துறை நடத்தியதையும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே விசாரணை என்கிற பெயரில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து இப்படியொரு நடவடிக்கையை மேற்கொண்டதற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!