June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர்
கேப்டன் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார் அந்த அறிக்கையில்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து, தேமுதிக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையும் வெற்றிபெற வைத்த தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் இன்றைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக எந்த ஒரு வன்முறையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல் ஜனநாயக ரீதியாக அனைவராலும் பாராட்டக்கூடிய நியாயமான, நேர்மையான, அமைதியான, தேர்தலாக நடந்து முடிந்து இருக்கிறது என்பதற்கான சான்றாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இருக்கின்றது. கடந்த காலங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் எப்படி நடந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அங்கு வன்முறை கட்டவிழ்க்கப்படும், அநீதி இழைக்கப்படும், நேர்மையில்லாத தேர்தல் நடத்தப்படும் என்ற ரீதியில் எதிர்க்கட்சியினர் வழக்குகள் தொடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடக்காத வண்ணம் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆளும் கட்சி தரப்பினர் இந்த தேர்தலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆட்சி பலம், அதிகார பலம், பண பலத்தை வைத்து கொண்டு, வன்முறையை கட்டவிழ்த்து, அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்றெல்லாம் எதிர் கட்சி தரப்பினர் வீண் வதந்திகளையும், பொய் பிரச்சாரத்தையும் பரப்பினார்கள். அந்த வதந்திகளை முறியடிக்கும் வண்ணம் மக்களே பாராட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துவிட்டது.
எனவே இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் “மக்கள் பணியே! மகேசன் பணி” என்று நினைத்து ஒவ்வொருவரும் சிந்தித்து தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கக் கூடிய அளவில் நல்லமுறையில் உழைக்க வேண்டும்.
மேலும் ஊழலுக்கு வழி வகுக்காமல், நேர்மையோடு மக்கள் பிரச்சனைகளை கையாண்டு, உள்ளாட்சி அமைப்புகள் தான் நம் நாட்டுக்கே வேர் போன்றது என்று உணர்ந்து பணியாற்றிடவேண்டும். உள்ளாட்சி அமைப்பின் மூலம் ஒவ்வொரு கிராமமும் சிறக்க வேண்டும், ஒவ்வொரு கிராமமும் சிறப்பாக இருக்கும் பொழுது தான் தமிழ்நாடு வளர்ச்சி மாநிலமாக அமையும். எனவே பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் இன்றைக்கு மக்களே பாராட்டும் வகையில் நேர்மையான முறையில் நடந்துள்ளது. எனவே வெற்றிபெற்ற வேட்பாளர்கள் நேர்மையோடு, மக்கள் பணிகளை கையில் எடுத்து ஒவ்வொரு கிராம புறத்திலும் பணிகளை சிறப்பாக செய்யவேண்டுமென்று அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இத்தேர்தலில் தோல்வியுற்றவர்கள் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல், அடுத்த வெற்றிக்கான படிகற்களாக மாற்றி கடுமையாக உழைக்கவேண்டும். உழைப்பையும், நேர்மையையும் செலுத்தி, அடுத்த வெற்றி நிச்சயம் உங்களை வந்து சேரும் வகையில் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இத்தேர்தலில் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியை சேர்த்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

 

About Author

error: Content is protected !!