May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வாழும்போதே வரலாறான வள்ளல் முஹம்மது நபி! வைகோ வாழ்த்து

மீலாது நபிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்துச்செய்தியில்

உலகின் பல மொழிகளில், பல நடைகளில், பல கோணங்களில், பல மதத்தவரால், பல இனத்தவரால், பல நாட்டவரால் கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக வரலாற்றில் எழுதப்பட்டு வரும் வரலாற்று நாயகர் அண்ணல் முஹம்மது (ஸல்).

‘அண்ணலாரின் வாழ்வு அழகிய முன்மாதிரி’ என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
எழுச்சி ஏற்படுத்த முகாந்திரம் இல்லாத சமூகத்திலே பிறந்து, ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதையே தொழிலாகக் கொண்ட கோத்திரங்களில் வளர்ந்து, ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்த்துக் கொண்டிருந்த அரபுகுல மக்களை உலகுக்குத் தலைமை தாங்கும் அளவுக்குத் தகுதி படைத்தவர்களாக மாற்றிக் காட்டியவர் மாநபி (ஸல்).

உலகெங்கும் வாழும் பல கோடி உள்ளங்களை அண்ணலாரின் அழைப்பு தட்டி எழுப்பி தன்பால் ஈர்த்துக் கொண்டது.

பிரபல உருதுக் கவிஞர் ஹாலி சொல்வார்:

“அண்ணல் நபியின் நேர்வழியின் முழக்கம் ஓர் இடியோசையாய் எழுந்தது. அரேபியாவின் அனைத்து மூலைமுடுக்குகளையும் அது அதிர வைத்தது. மக்களின் மனங்களில் மகத்தானதோர் உத்வேகத்தை மலரச் செய்தது. உறங்கிக் கிடந்த உலகம் உற்சாகத்துடன் எழுந்தது.

மணல்வெளிப் பாலைகளில் மலை முகடுகளில் அண்ணலாரின் சத்தியநாதம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
போர்த் தளபதியாக, நீதிபதியாக, பேராசிரியராக, ஆட்சியாளராக, கணவராக, தந்தையாக, தோழராக, நல்லிணக்க விரும்பியாகத் திகழ்ந்தவர் அண்ணலார். காடு மலை செல்லாது, உலகத்தை வெறுக்காது, இல்லறத்தை நல்லறமாய் இயற்றும் வள்ளலாக வாழ்ந்தவர். எதிலும் ஒரு புது மாதிரி, எல்லோர்க்கும் முன்மாதிரி, வாழும்போதே வரலாறு ஆனவர்; அடியவர் ஒருவர் அரசராய் ஆனார்; அண்ணலார் அரசராய் இருந்தும் ஆண்டியாய் தொடர்ந்ததும் அற்புதம் தானே!”

தன் வாழ்நாளிலேயே தலைகீழ் மாற்றங்களைக் கண்ட பெருந்தகை அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள்; மகிழ்ச்சி நிறைந்த பெருமங்கல நன்நாளில் இஸ்லாமிய சகோதரர் – சகோதரிகளுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என வாழ்த்து தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!