March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் எம்.எல்.ஏ பேட்டி

ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் குறித்து சமூக வலை தளங்களில்  பல்வேறு கருத்துகள் பரவி வரும் நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்தார் தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் இது குறித்து அவர்  நிருபர்களிடம் கூறியதாவது:
2016ல் நடைபெற்ற தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக நான் போட்டியிட்ட போது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம், அனுமன் நதி பாலம், இரட்டைகுளம்-ஊத்துமலை கால்வாய் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தேன். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
இதன் பயனாகஅப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவால் சுரண்டை அனுமன் நதி பாலம் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணி நிறைவு பெற்றுள்ளது. இதே போல் தொடர்ந்து சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தியதன் பயனாக தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டு விட்டது.
அடுத்ததாக பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்;டம் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. பல்வேறு தொய்வுக்கு பின்னர் இத்திட்டத்திற்கு கடந்த 2005ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அம்மாவால் புத்துயிர் கொடுக்கப்பட்டு பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு 2015ம் ஆண்டு 110 விதியின் கீழ் இப்பணிகளை துவங்குவதற்காக முதற்கட்டமாக 5.25 கோடியை ஒதுக்கீடு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து நான் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானதற்கு பிறகு இத்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக இத்திட்டத்திற்கு ரூ.41.70 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, இந்நிதியை நபார்டு வங்கி மூலம் கடனாக பெற்று இத்திட்டத்தை நிறைவேற்றலாம் என கடந்த ஜனவரியில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு நபார்டு வங்கிக்கு அனுப்பபட்டது. இதற்கிடையே பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் அப்பணி சற்று தொய்வு ஏற்பட்டது.
தற்போது தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியானது இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் வளரும் என்ற அடிப்படையில் நிதியை வழங்கலாம் என மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளது. இதனால் வரும் 13ந்தேதி நடைபெறும் நபார்டு வங்கி கூட்டத்தில் ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு பெற அனுமதிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிலர் சமூக வலைதளங்களில் இத்திட்டம் தங்களது தலைவர் மூலம் மத்திய அரசிடம் வலியுறுத்தியதன் பேரில் தான் நபார்டு வங்கி நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது மாநில அரசின் திட்டமாகும். மத்திய அரசுக்கும் இத்திட்டத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே போல் இரட்டைகுளம்-ஊத்துமலை கால்வாய் திட்டப்பணிக்கு ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூர்வாங்க பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தக்கட்ட பணிகளும் விரைவில் நடைபெறும். மேலும் வீராணம் குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக ஆற்றில் திறந்து விடப்படுவதை தெற்குகாவலாக்குறிச்சி வரை கால்வாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் நிறைவேற்றப்படும் என தென்காசி தனி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் அறிவித்துள்ளார். எனவே இத்திட்டமும் விரைவில் தொடங்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

error: Content is protected !!