February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சிறப்புரையாற்றும் திரைப்பட இயக்குநர் நீலன்

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சங்கத் தமிழ் நூல் வெளியீட்டுவிழா

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்சிறப்புச் சொற்பொழிவு மற்றும் சங்கத் தமிழ் நூல் வெளியீட்டுவிழா பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் அரசுதவி பெறும் மற்றும் அரசுதவி பெறாத் தமிழ்த்துறைகள் இணைந்து சிறப்புச் சொற்பொழிவு மற்றும் சங்கத் தமிழ் நூல் வெளியீட்டுவிழாவை நடத்தின.
கலைப் புலமுதன்மையர் முனைவர் ச. மகாதேவன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்புரையாற்றும் திரைப்பட இயக்குநர் நீலன்

கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார்.

தமிழ்த்துறை தயாரித்துள்ள சங்கத் தமிழ் எனும் நூலை அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் அ. அப்துல் காதர் வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார்.

அதன் முதல் பிரதியை பெற்று, பிரபல திரைப்பட இயக்குநரும் கவிஞருமான திரு. நீலன், “படைப்பெனும் அருங்கலை” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றும்போது,

பாட்டியிடம் சரியாகக் கதை கேட்டவர்களே இன்றைய தேர்ந்த படைப்பாளிகளாக உள்ளனர் : திரைப்பட இயக்குநர் திரு. நீலன்

படைப்பு என்பது அனுபவப் பகிர்வே. கனவும் கற்பனையும் கலந்து ஒன்றாகும் போதுதான் ஆகச்சிறந்த கலைப்படைப்புகள் தோன்றுகின்றன. பாட்டியிடம் கதை கேட்டதால்தான் இன்று திரைத்துறையில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அந்தக் கதைகேட்கும் மரபை இன்றைய காட்சி ஊடகங்கள் சிதைத்து கற்பனை செய்யும் ஆற்றலைக் குலைத்துவிட்டன. மொழியின் அடிப்படையே கலைநாடும் மனம்தான். தோன்றிற் புகழோடு தோன்றுக என்கிற திருக்குறளைத் தோன்றுதல் என்றால் பிறத்தல் என்ற பொருளில் புரிந்துகொண்டால் அது தவறு.

நான் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்போது என் தமிழாசிரியர் ம.சௌந்தரராசன் சிலப்பதிகாரப் பாடல்களை ஓர் ஓசைஒழுங்கோடு மனனம் செய்து வகுப்பில் ஒப்பிக்க வைப்பார். அந்த ஓசைஒழுங்கில் நான் கற்ற சங்கப் பாடலும் திருக்குறளும் இன்றும் என் நினைவில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. உண்மையில் வாழ்க்கையை வெகுநுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தமிழ் இலக்கியம் பயின்றால் போதும். சரியான உச்சரிப்போடு தமிழ் பயின்றோமானால் நம்மால் பிழையில்லாமல் தமிழில் எழுதமுடியும்.

நூல் வெளியீடு

நாம் விழிப்பாயிருக்கிறவரை நம் மனது நம்மைச் சரியாக வழிநடத்தும். தேர்ந்த கலைப் படைப்பு நாம் வளரவளர ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு பொருளைத் தரும்.

பிரமிள் கவிதைகள் இன்றும் புதிதாக இருப்பது அதன் செவ்வியல் தன்மையால்தான். ஒருபடைப்பில் படைப்பாளியின் ஆன்மா ஒன்று சேரும்போது அந்தப் படைப்பு சாகாவரம் பெறுகிறது. ஒழுக்கம் கற்பிப்பதோ செய்தி சொல்வதோ தேர்ந்த கலையின் வேலையில்லை. கலை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். நல்ல கலைப்படைப்பில் பல குறியீடுகள் இருக்கும். வாசகன் உணர்ந்து ரசிக்கும் பல இடைவெளிகளைக் கலை தன்னகத்தே கொண்டிருக்கும். நம்மைப் பிளந்து நம்மை நமக்குக் காட்டுவதுதான் நல்ல கலை. தகழியின் செம்மீன் அதற்குச் சான்று. மாணவர்கள் அனைவரும் படைப்பாளியாக மாற வேண்டும். ஒரு சமுதாயத்தை வளமான சமுதாயமாக மாற்றும் ஆற்றல் படைப்பாளர்களுக்கு மட்டுமே உண்டு” என்று பேசினார்.

நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு விருந்தினராக தொல்லியல் ஆர்வலர் திரு முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றும்போது,

ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நதிக்கரையோர நாகரிகம் 2900 ஆண்டுகளுக்கு முற்பட்டது” : முத்தாலங்குறிச்சி காமராசு கருத்து

1827 இல் ஜெர்மானிய அறிஞர் ஜாகோர்தான் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வைத் தொடங்கினார். 1902 இல் அலஸ்சாண்டர் ரியா அகழ்வாய்வை ஆதிச்சநல்லூரில் தொடர்ந்தார். அவர் அவ்வாய்வில் எடுத்த பொருட்களை 21 மாட்டுவண்டிகளில் ஏற்றி தொடர்வண்டி மூலம் சென்னைக்குக் கொண்டு சென்றார். சாத்தன்குளம் ராகவன் ஆதிச்சநல்லூர் குறித்த முதல் நூலைத் தமிழில் தந்தார். ப்ளோரிடாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிச் சோதித்ததில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நதிக்கரையோர நாகரிகம் 2900 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரியவருகிறது. மாணவர்கள் ஆய்வுத்துறையில் ஈடுபடவேண்டும். தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் நம்மை உலகிற்கு அடையாளம் காட்டுவதாய் அமையும். நம் மொழியின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்வதாய் அமையும்” என்று பேசினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் அரசுதவி பெறா தமிழ்த்துறைத் தலைவர் திரு. மு. சாதிக் அலி நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் அ.மு. அயூப்கான், முனைவர் எஸ்.ஏ. சேக் சிந்தா, முனைவர் ஆர். அனுசுயா, முனைவர் மாலிக், முனைவர் எஸ். செல்வ சுகன்யா, முனைவர் ஆண்டனி சுரேஷ், முனைவர் எஸ். தமிழினியன், முனைவர் எஸ். ஆமீனா பானு ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

About Author

error: Content is protected !!