May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கும்பகோணத்திற்கு இணையான நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கோவில்கள்

கும்பகோணத்திற்கு இணையான திருத்தலங்களை உள்ளடக்கிய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது பழமொழி. தமிழகத்தில் கும்பகோணத்தை கோவில் நகரம் என்பார்கள். அதற்கு இணையாக நெல்லை, துாத்துக்குடி மாவட்டத்தில் நவ கைலாயம், நவதிருப்பதி மற்றும் பரிகார ஸ்தலங்கள் அதிகமாக உள்ளன.

ராஜராஜ சோழன் கட்டிய பிரசித்திபெற்ற பிரகதீஷ்வரர் கோவில் தஞ்சாவூரில் உள்ளது. தஞ்சை மாவட்டமான கும்பகோணம் தாலுகாவில் மட்டும் 100க்கும் அதிகமான கோவில்கள், பரிகார தலங்கள் உள்ளன. இதனால் அதனை கோவில் நகரம் என்றும் கூறுவர்.
கும்பகோணம், திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம், திருவிடைமருதூர், பாபநாசம், குத்தாலம், திருவாரூர், திருக்கடையூர் அபிராமி கோவில், மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், சீர்காழி, திருநள்ளாறு ஆகிய ஊரில் பிரசித்திபெற்ற கோவில்கள் உள்ளன. இங்கு தமிழகம் மட்டுமல்ல, வெளிமாநிலங்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் சுற்றுலா வந்து செல்கின்றனர்.
கோவில் நகரமான கும்பகோணத்திற்கு இணையாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நவ கைலாயம், நவ திருப்பதி கோவில்கள் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் பரிகார ஸ்தலங்கள் அதிகமாக உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் நவ கைலாயத்தில் முதல்கைலாயமான பாபநாசம் சூரியதலம், சேரன்மகாதேவியில் சந்திரதலம், கோடகநல்லூரில் செவ்வாய்தலம், சங்காணியில் ராகுதலம் ஆகிய நான்கு சிவன் கோவில்கள் உள்ளன. அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாட்டில் குருதலம், ஸ்ரீவைகுண்டத்தில் சனிதலம், தென்திருப்பேரையில் புதன்தலம், ராஜபதியில் கேதுதலம், சேந்தபூமங்கலத்தில் சுக்ரதலம் ஆகிய ஐந்து சிவன் கோவில்கள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நவ கைலாயங்கள் உள்ளன.
இதில் முதல் மூன்று தலங்களை மேல கைலாயம் எனும், அடுத்த மூன்று தலங்களை நடு கைலாயம் எனவும், கடைசி மூன்று தலங்களை கீழ கைலாயம் எனவும் அழைப்பதுண்டு. இதில் ஒவ்வொரு கைலாயமும் ஒவ்வொரு நவக்கிரக தலமாக விளங்குவதால் நவ கைலாயங்களை சுற்றி வரும்போது நவக்கிரகங்களையும் சேர்த்து சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோவில், நத்தம் ஸ்ரீவரகுணமங்கை, திருப்புளிங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தன், இரட்டை திருப்பதி, திருக்கோளூர், தென்திருப்பேரை மகரநெடுங்குழை காதர், ஆழ்வார்திருநகரி பொலிந்துநின்ற பெருமான் ஆகிய 9 தலங்கள் உள்ளன. இத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் திறப்பு மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பாகும்.

விழா காலங்களில் நவ கைலாயம் மற்றும் நவ திருப்பதி கோவில்களை சுற்றி வருவதற்கு பாபநாசம், நெல்லையில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி தாலுகாவில் மட்டும் 40க்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இங்கு ராமேஸ்வரத்திற்கு இணையான பித்துரு தோஷம் நீககும் ஆலயமும் உள்ளது. சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் 6500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டபட்ட பக்தவச்சல பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலினாது. பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது. மார்கழி மாதத்தில் வியதிபாத யோக நாளில் அதிகாலை நேரத்தில் இந்த கோவிலை ஓட்டியுள்ள தாமிரபரணி நதியில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்து பக்தவச்சல பெருமாளை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் பன்டைகால கட்டிக்கலைக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிற்பங்களால் ஆன உட்பிரகாம் உள்ளது. நெல்லை, தூத்துக்குடி கும்பகோணத்திற்கு இணையான கோவில் நகரம் என்பதில் பெருமை கொள்கிறது.

அக்ஹரகாரம்

கும்பகோணத்தில் கோவில்கள் அதிகம் போல் அக்ரஹாரங்களும் அதிகம். அதேபோல், நெல்லை மாவட்டத்தில் கோவில்கள் அதிமாக உள்ளதை போல், அக்ரஹாரங்களும் அதிகமாக உள்ளன.
வீட்டை ரொம்ப நீட்டா வச்சிருக்கீங்க என பாராட்டி கேட்டிருப்பீர்கள். ஆனால் இவ்வளவு நீட்டி முழக்கிய வீடுகளை பார்த்திருக்கிறீர்களா. வீட்டின் முன்வாசல் ஒரு வீதியிலும், பின்வாசல் மறுவீதியிலும் முடியும் வண்ணம் சுமார் 100 அடி முதல் 500 அடி நீளம் வரை அக்ரஹாரத்தில் வீடுகள் அமைந்துள்ளன.


ரோஜா, முதல்வன், அந்நியன் சூட்டிங் எடுத்த சுந்தரபாண்டியபுரம், ஜென்டில்மேன், சாமி சூட்டிங் எடுத்த கல்லிடைகுறிச்சி, நாதஸ்வரவித்வான் அருணாசலம்பிள்ளை வாழ்ந்த காருகுறிச்சி உள்ளிட்ட ஊர்களில் அக்ரஹார வீதிகள் உள்ளன. கல்லிடைகுறிச்சியில் மட்டும் 18 அக்ரஹார வீதிகள் உள்ளன. இங்குள்ள வீரபுரம் தெரு நீண்ட, நெடிய பெரிய அகஹார வீதியாகும். அக்ரஹாரத்தில் கோவில் கோபுரம் உயர்ந்து நிற்க, அதன் முன்புறம் வீதிகள் அழகாக விரியும். வீதியின் மேற்கில் பெருமாள் கோவிலும், கிழக்கில் சிவன்கோவிலும் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

✍️ சிவசு.

About Author

error: Content is protected !!