May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காலேஜ் சேர்க்க அவதிப்படும் பெற்றோரா நீங்க

பள்ளி வாழ்க்கையை நிறைவு செய்து வாழ்வின் மிக முக்கியக் கட்டமான கல்லூரி உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழையும் இந்த நேரத்தில் “பெற்றோர்கள்” கவனத்தில் கொள்ள வேண்டியவை..

1. இளம் வயதில் படிக்க விரும்பி, ஏதேனும் ஒரு காரணத்தால் உங்களுக்குக் கிட்டாமல் போன படிப்பை, பிள்ளைகளின் வாயிலாக அடைந்துவிட வேண்டுமென நினைக்காதீர்கள்.

2. பிள்ளைகள் விரும்பாத படிப்பை, இதுதான் நல்லது என்று ஒருபோதும் சுமத்தாதீர்கள்.

3. குறிப்பிட்ட ஒரு படிப்பை படித்தால்தான் உறவுகள் மத்தியில் கௌரவம் என்று ஏதேனும் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து பிள்ளைகளின் உணர்வு மற்றும் திறமைகளைப் பலியிடாதீர்கள்.

4. எளிதாகவோ, சிரமப்பட்டோ கல்லூரியில் ஒரு இடத்தைப் பிடித்து விடலாம். அப்படித் தேர்ந்தெடுக்கும் படிப்பிற்கு நியாயம் செய்யும் வகையில் தொடர்ந்து உறுதியான மனநிலையோடு இருங்கள்.

5. வாழ்வின் மிக முக்கியக் கடமைகளில் ஒன்று மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பது எனக் கருதி, திருமணம் ஏற்பாடாகும் வரை ஏதேனும் ஒரு கல்லூரியில் எதாச்சும் படிக்கட்டுமே என்ற எண்ணத்தோடு அனுப்ப நினைக்காதீர்கள்.

6. பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் படிப்பில், ஏற்கனவே சாதித்த, சிறப்பாக இயங்கிவரும் சிலரை அடையாளம் கண்டு உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

7. கல்வி மிக மிக முக்கியம்தான். வெறும் புத்தகப் புழுவாக மாற்றாமல் கல்வியோடு சேர்த்து வாழ்க்கையும் கற்றுக்கொடுங்கள்.

உயர் கல்விக்குச் செல்லும் சூழலில் மாணவ, மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது

1. உங்கள் திறமைக்கு, ஆர்வத்திற்கு தீனி போடும் கல்லூரிப் படிப்பை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

2. இந்தப் படிப்புதான் சிறந்தது, இது மோசமானது என்று எதையும் பட்டியலிட முடியாது. யாரேனும் அப்படி தினித்தால் நம்ப வேண்டாம்.

3. எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என ஓரளவு திட்டம் வகுத்து, அதற்குப் பொருத்தமான கல்லூரி பிரிவு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கவும்.

4. தேர்ந்தெடுக்கும் படிப்பின் துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனும் உறுதியோடு தேர்ந்தெடுங்கள்.

5. ‘இதுதான் நல்லது என யாரோ சொன்னார்கள்!’ என உங்கள் வாழ்க்கையை அடகு வைக்க வேண்டாம்.

6. ‘சும்மா இருக்க முடியாது, எதாச்சும் படிப்பேன், வேலை, தொழிலுக்கு அதைப் பயன்படுத்த மாட்டேன் அல்லது கொஞ்ச நாள் வேலைக்குச் செல்வேன்’ என்ற மனநிலையோடு மட்டும் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு பிறகு வீணடிக்க வேண்டாம். காரணம் அந்த இடம் மிகவும் தேவையுள்ள ஒருவருக்கானதாக இருக்கலாம். அதை மதிப்பெண், பணம், சிபாரிசு என்ற அடிப்படையில் பிடித்துக் கொண்டு நீங்களும் பயன்படுத்தாமல் இன்னொருவரையும் பயன்பெற விடாமல் செய்ய வேண்டாம்.

7. எது உங்களை வாழ்நாள் முழுக்க உயிர்ப்புடன் வைத்திருக்கும் என நினைக்கிறீர்களோ அந்தப் படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கவும்.

ஈரோடு கதிர்
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்
நூலாசிரியர்-வேட்கையோடு விளையாடு (பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்காக அனுபவக் கட்டுரைகள்)

About Author

error: Content is protected !!