February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய பால் திருடப்படலாம்-சு.ஆ.பொன்னுசாமி

“நடிகர் விஜய் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய பால் திருடப்படலாம்”
– பால் முகவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளிட்டுள்ள அறிக்கையில்

அன்பிற்கினிய பால் முகவர்களே வணக்கம்.

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அத்திரைப்படம் வெளியாகின்ற திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் “முன்னணி நடிகர்களின் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம்” செய்கிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை ரசிகர்கள் வீணாக்குவதை நாம் அனைவருமே நன்கறிவோம்.

உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும், “ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்” என்கிற முயற்சியில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடிகர்கள் திரு. ரஜினிகாந்த், திரு. விஜய், திரு. அஜீத், திரு. சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் கவனத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை கொண்டு சென்றதோடு, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி “உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்” என சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடமும் பலமுறை புகார் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை நம்முடைய கோரிக்கைகள் எவர் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை. “ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த மேற்கண்ட முன்னணி நடிகர்கள் எவரும் துளியளவு முயற்சிகளைக் கூட மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.

“நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுப்பதில் பால் முகவர்கள் சங்கத்திற்கு என்ன அக்கறை…?” என பல தரப்பிலிருந்தும் வினாக்கள் எழுகின்றன. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் உள்ள பால் முகவர்களின் கடைகளுக்கு முன்பிருந்து அவர்களின் ரசிகர்கள் பாலினை திருடிய சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளது அனைவரும் நன்கறிவீர்கள்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் சார்பிலும், நமது சங்கத்தின் சார்பிலும் காவல்துறையில் பல மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டதையும், “கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் திருடு போனால் நடவடிக்கை எடுக்க இயலாது” என காவல்துறை தரப்பில் கைவிரிக்கப்பட்டதையும் நாம் ஏற்கனவே கடந்த காலங்களில் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பதிவு செய்திருக்கிறோம்.

எனவே தான் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தி வீணாகிப் போவதையும், பால் முகவர்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையில் தான் முன்னணி நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ரசிகர்களின் உழைப்பின் மூலம் இன்று உச்சாணிக் கொம்பில் இருக்கும் “சமூக அக்கறை கொஞ்சமும் இல்லாத முன்னணி நடிகர்களை அவர்களது ரசிகர்கள் வேண்டுமானால் கண்மூடித்தனமாக நம்பட்டும்” ஆனால் நாங்கள் நம்பத்தயாராக இல்லை.

இனிமேல் வருங்காலங்களில் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுத்து நிறுத்த நடிகர்களிடம் கோரிக்கைகளை வைப்பதை விட தமிழகம் முழுவதும் தடை செய்வதற்கு நீதிமன்றத்தின் நாடுவோம். ஏற்கனவே “கர்நாடகா மாநிலத்தில் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய நீதிமன்றம் தடை” விதித்துள்ளதோடு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தையும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருகின்ற “தீபாவளி” திருநாளை முன்னிட்டு 25.10.2019அன்று முன்னணி நடிகரான திரு. விஜய் நடிப்பில் “பிகில்” திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த நேரங்களில் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ஒரு சில ரசிகர்கள் பால் முகவர்களின் கடைகளுக்கு முன்பிருந்து பாலினை திருடலாம் என்கிற அச்சம் கலந்த சந்தேகம் இருக்கிறது.

பொதுமக்கள் அனைவரும் கண்ணயர்ந்து உறங்கும் நேரத்தில் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அனைவரும் கண்விழித்து தங்குதடையற்ற சேவையை வழங்குவதாக பால் முகவர்களின் பணி அமைந்திருப்பதால் இது போன்ற நேரங்களில் நாம் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

ஏற்கெனவே உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி அல்லல்பட்டு வரும் பால் முகவர்கள் “பாலை டப்புகளோடு பறிகொடுத்தால் அந்த இழப்பை ஈடுகட்ட பல நாட்கள் ஊதியமின்றி பணியாற்றும் சூழல் ஏற்படும்”. மேலும் அனைத்திற்கும் நாம் “காவல்துறையை மட்டுமே நம்பிக் கொண்டும், அவர்கள் மீது குறை சொல்லிக் கொண்டும் இருப்பதிலும் அர்த்தமில்லை”.

எனவே நாளை (25.10.2019) முதல் ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் நள்ளிரவு தொடங்கி காலை வரை தமிழகம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நமது வாழ்வாதாரத்தை தற்காத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.

மேலும் ரசிகர்கள் எனும் பெயரில் “சமூக விரோதிகள்” எவரேனும் பாலினை திருட முயற்சி செய்தால் இரவு பாதுகாப்பு பணியில் இருக்கும் பால் முகவர்கள் அவர்களை பிடித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்து உரிய ரசீது (CSR COPY) முதலில் பெற்று கொண்டு உடனடியாக நமது சங்கத்தின் தலைமைக்கு தகவல் கொடுக்க வேண்டுகிறோம்.

நமக்கு இழப்பு ஏற்பட்ட பிறகு வருந்துவதை விட, இழப்பு ஏற்படும் முன் தற்காத்துக் கொள்வதே சாலச்சிறந்தது.

ஒன்றுபடுவோம்..!
வென்று காட்டுவோம்…!!

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!