February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஏற்றுமதியில் சாதனை படைக்கும் மருத்துவ குணம் கொண்ட ‘நித்திய கல்யாணி’

புற்றுநோய், நீரிழிவிற்கு மருந்தாகும், நித்திய கல்யாணி மூலிகை செடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நித்திய கல்யாணி செடி மூலிகை மருத்துவப் பயன் கொண்டது. பூ, வேர் ஆகியவை அதிகமாக மருத்துவத்திற்கு பயன்படுகிறது. நித்தியகல்யாணி வேர்த்தூளை நீரிழிவு நோயை கட்டுபடுத்த சுடுநீரில் கலந்து சாப்பிடலாம். உடல் அசதியை போக்க பூக்களை தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம். புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவப் பயன் கொண்டது. இதன் குணம் மருத்துவ ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மலர்கள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறமாக இருக்கும் . எல்லா பருவங்களிலும் பூத்துக் குலுங்குவதால் நித்தியகல்யாணி என்ற பெயரை பெற்றது.

இந்தியாவில் மூலிகை குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மூலிகை பயன்பாடு குறைவாக உள்ளது.

மூலிகை பயன்பாட்டினை நன்கு அறிந்த வெளிநாட்டினர், தமிழகத்தில் பயிரிடப்படும் நித்தியகல்யாணி, அவுரி, சோற்றுகற்றாலை உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகளை மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

இதனையறிந்த விவசாயிகள் பலர், தமிழகத்தில் நித்தியகல்யாணி, அவுரி ஆகிய மூலிகை செடி சாகுபடியில் இறங்கியுள்ளனர். இதற்கு கரிசல்மண், செம்மண் உகந்தது. சாத்தூர், சிவகாசி, சங்கரன்கோவில், கழுகுமலை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் ஏராளமாக பயிரிட்டுள்ளனர்.

நித்தியகல்யாணி செடி அறுவடைக்கு பின், ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஏஜென்சிக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவர்கள் புற்றுநோய், நீரிழிவு, சர்க்கரை நோய் உள்ளிட்ட மருத்துவ பயன்பாட்டிற்காக , ஐரோப்பா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அங்கு மூலிகை பவுடர்களாக தயாரிக்கப்பட்டு மருந்தாக பயன்படுகிறது.

விவசாயி ஒருவர் கூறியதாவது:

தொடர்ந்து 25 வருடங்களாக விவசாயம் செய்து வரும், நான், 100 ஏக்கர் நிலத்தில் நெல், வாழை, பருத்தி மற்றும் மூலிகை செடியான அவுரி பயிரிட்டுள்ளேன். நித்திய கல்யாணி மூலிகையின் மருத்துவகுணம் அறிந்து 10 ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை வீதம் 20 கிலோ விதை கிலோ ரூ. ஆயிரத்திற்கு வாங்கி பயிரிட்டுள்ளேன். ஒரு முறை விதைத்தால், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வீதம், மூன்று முறை அறுவடை செய்யலாம். மாதம் மூன்று முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு முறைக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் என வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டலாம். நித்தியகல்யாணி செடியை கால் நடைகள் உண்ணாது. எனவே வேலியில்லாமல் பயிரிடலாம். பராமரிப்பு செலவு மிகவும் குறைவாக உள்ளது. அதிக லாபம் ஈட்டமுடிகிறது.

இவ்வாறு கூறினார்.

-சிவசு.

About Author

error: Content is protected !!