June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கமல்ஹாசனுடன் சு.ஆ.பொன்னுசாமி

அர்ஜுன் சம்பத் மன்னிப்பு கேட்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாஸன் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதா…?உங்களது நாரதர் வேலை பலிக்காது அர்ஜுன் சம்பத்திற்கு தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் கடும் கண்டனம்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

கமல்ஹாசனுடன் சு.ஆ.பொன்னுசாமி

மரியாதைக்குரிய திரு. அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு வணக்கம்.

கொரனா எனும் கொள்ளை நோயிடமிருந்து தற்காத்துக் கொள்ள சரியான திட்டமிடல் இல்லாமல் 144தடை உத்தரவு என்கிற பிரம்மாஸ்திரத்தை ஏவி பல கோடிக்கணக்கான ஏழை, எளிய, சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய பாரதப் பிரதமருக்கு எங்களது தலைவர் எழுதிய கடிதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளீர்கள்.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை மிக்க மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பாரதப் பிரதமருக்கு பகிரங்கமாக கடிதம் எழுதிட ஒரு சாமானிய மனிதனுக்கு, அதுவும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு உரிமை இல்லை என்பதை போல் உங்களது கடிதம் அமைந்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. பிரதமரோ, ஜனாதிபதியோ, உச்சநீதிமன்ற நீதியரசர்களோ, மாநில ஆளுநர்களோ, முதல்வர்களோ அனைவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான் என்பதை நீங்கள் உங்களுக்கு வசதியாக மறந்து போனீர்கள்.

கொரானா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ஆதரித்ததோடு, பொதுமக்கள் மத்தியில் இன்றளவும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஒரு தலைவர் உண்டென்றால் அது எங்களது தலைவர் மரியாதைக்குரிய திரு. கமல்ஹாசன் அவர்கள் தான். ஆனால் இது வரை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எவரேனும் கொரானா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்தனரா…? என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி கொரானா வைரஸ் தொற்றை கண்டு உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தனது வீட்டையே கொரானா வைரஸ் தடுப்பு முகாமாக ஏழை, எளிய மக்களை பாதுகாத்திடும் மருத்துவ மையமாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசிடம் முதன் முதலில் அனுமதி கேட்டவர் எங்களது தலைவர் தான். அதன் பிறகு தானே தமிழக எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என ஒவ்வொருவராக போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தனர்.

நீங்கள் சார்ந்திருக்கும் மதம் சார்ந்த கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்பதற்காக அவர் எதைச் செய்தாலும் அதனை கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வேண்டுமானால் ஆதரியுங்கள். ஏனெனில் இந்துத்துவா என்கிற பிறை உங்களது கண்களை மறைக்கிறது. அதனால் சிவப்பு வண்ணத்தை பச்சையென்று சொல்வீர்கள். அப்படியே எங்களது தலைவரும் சொல்ல வேண்டும் என நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்களது மூடத்தனமாகும்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மதம் சார்ந்த சிறுபான்மையின மக்களை நீங்கள் வெறுப்பு அரசியல் கண் கொண்டு பார்ப்பதால் அவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் உங்களுக்கு நக்சல்பாரிகளாகவும், தேச விரோத சக்திகளாகவுமே தெரியும். அத்துடன் இந்துத்துவா தத்துவத்தை ஆதரித்தால் அவர்கள் தேசப்பற்றாளர்களாகவும், மற்றவர்கள் தேசவிரோத சக்திகளாகவுமே உங்கள் கண்களுக்கு தெரிவதில் வியப்பில்லை தான். கொரனா வைத்தியம் கடந்து உங்களுக்கு மத வைத்தியம் செய்து உங்களை குணப்படுத்த வேண்டியது தற்போதைய சூழலில் காலத்தின் கட்டாயமாகும் அதனை தமிழக மக்கள் விரைவில் உங்களுக்கு செய்து முடிப்பார்கள்.

உங்களுக்கு விளம்பர வெளிச்சம் வேண்டும் என்பதற்காக ரஜினியின் மக்கள் மன்றம் அன்னதானம் உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருகிறது. நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி வருகிறது. மக்கள் நீதி மய்யம் என்ன செய்திருக்கிறது..? என ரஜினிக்கும், எங்களது தலைவருக்கும் சிண்டு முடிந்து விடுகின்ற நாரதர் வேலையை செய்திருக்கிறீர்கள்.

நீங்கள் என்ன தான் தலை குப்புற குட்டிக் கரணம் அடித்து நாரதர் கலகம் செய்ய நினைத்தாலும் உங்கள் எண்ணம் சிறிதும் ஈடேறப் போவதில்லை. ஏனெனில் ரசிகர்களை இன்றளவும் தனது கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்ற விசிலடிச்சான் குஞ்சுகளாக வைத்திருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் தான் அரசியல் கட்சி துவங்கும் முன்பே தனது ரசிகர்களை மக்களுக்கு நற்பணி செய்கின்ற நல்லவர்களாக மாற்றி வழி நடத்தியவர் எங்களது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்.

அரசியல் கட்சி துவங்கும் முன்பே நற்பணிகள் பலவற்றை சத்தமின்றி செய்து புரட்சித் தலைவரின் ஆசி பெற்றவர் தற்போது மக்கள் கொரானா வைரஸ் காரணமாக 144தடை உத்தரவால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் போது சும்மா இருந்து விடுவாரா என்ன…? தனித்திருப்போம், சமூக விலகலை கடைபிடிப்போம் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து கொண்டே மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் நலப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். தலைவரின் ஆணையேற்று தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று களப் பணி செய்து வருகின்றனர் கட்சியின் தொண்டர் படையினரும், போர்ப்படை தளபதிகளான நிர்வாகிகளும்.

தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் எங்களது தலைவரின் போர்ப்படை தளபதிகளாக மக்களுக்கு களப்பணியாற்றி வருவது உங்கள் விழிகளுக்கு தெரியாமல் போனது கூட ஒரு வகையில் நல்லது தான். ஏனெனில் தமிழகத்தில் மற்றவர்கள் செய்கின்ற நல்லவற்றை ஆளுங்கட்சியினர் தாங்கள் செய்ததாக கூறி நாடகமாடும் ஸ்டிக்கர் கலாச்சாரம் தானே தற்போது அரங்கேறி வருகிறது. எனவே உங்களை போன்றோரின் விழிகளில் இருந்து நாங்கள் விலகி மக்கள் பணி செய்வதே நல்லது என நினைக்கிறோம்.

அதுமட்டுமினறி தினசரி வேலைக்கு போனால் தான் வீட்டில் அடுப்பெரியும், அப்போது தான் வீட்டில் உள்ளவர்கள் பசியாற முடியும் என்கிற நிலையில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள், தச்சர், நெசவாளர், விவசாய கூலிகள், நடைபாதை சிறு, சிறு வியாபாரிகள், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், அரசு பணியாளர்கள், ஆட்டோ, டாக்ஸி, சரக்கு வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என பல லட்சம் தொழிலாளர்கள் 144தடை உத்தரவால் வீடுகளுக்குள் முடங்கிப் போய் கிடக்க அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 1000ம் ரூபாய் உதவிப்பணமும், 10கிலோ அரிசி, 1கிலோ பருப்பு, 1கிலோ சர்க்கரை, 1கிலோ எண்ணை விலையில்லாமல் கொடுத்து விட்டால் அந்த தொழிலாளர்களின் வீடுகளில் மாதம் முழுவதும் அடுப்பெரிந்து சோறாகி விடும். அதனை உண்டு அவர்களது குடும்பத்தினர் அனைவரும் நிம்மதியாக வாழ்வார்கள் என்று நினைப்பதை மனச்சாட்சி உள்ள மனிதராக இருந்தால் அதனை உங்கள் மனச்சாட்சியிடமே சரியா…? என கேளுங்கள்.

ஆளுங்கட்சியின் அடிவருடியாக இருந்து கொண்டு ஆட்சியாளர்கள் எதை செய்தாலும் சரி தான் என ஜால்ரா போட வேண்டும், பாராட்டு பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எங்களது தலைவரிடம் எதிர்பார்த்தால் நீங்கள் தோற்றுத் தான் போவீர்கள். ஏனெனில் அவர் சாதாரண தொழிலாளியாக இருந்து 60ஆண்டுகாலம் திரையுலகில் கோலோச்சினாலும் கூட ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க எவராக இருந்தாலும் அவர்களை எதிர்க்க சற்றும் தயங்க மாட்டார் என்பதை இந்நேரத்தில் தங்களுக்கு சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டதாக மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் அச்சமயத்தின் போது ஒவ்வொரு சாமான்ய மக்களும் 4ஆயிரம் ரூபாய்க்காக ATMவாசல்களில் தவம் கிடந்ததையும், அதில் எண்ணற்றோர் உயிரிழந்ததையும், வியாபார பெருமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதையும், அதனால் இந்திய பொருளாதாரம் கடுமையாக சரிந்ததையும் உங்களுக்கு வசதியாக மறந்து போனீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

கறுப்புப் பணத்தை ஒழித்து விட்டோம் என போலியாக நீங்கள் மார்தட்டிக் கொண்டாலும் சாமானிய மக்களுக்கு கிடைக்காத 4ஆயிரம் ரூபாய் பணம் சேகர் ரெட்டி போன்றோர் வீடுகளிலும், பாஜக அமைச்சர்கள் மற்றும் கார்ப்பரேட்களின் பலரது படுக்கையறையிலும் மெத்தைக்குப் பதிலாக 2ஆயிரம் ரூபாய் கட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை எங்களைப் போன்றோர் இன்னும் மறக்கவில்லை. அவை இன்னும் பசுமரத்தாணியாகவே எங்களது நெஞ்சில் பதிந்து கிடப்பதையும் மறந்து போன உங்களது மூளைக்கு நினைவூட்டுகிறேன்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்கிற மிகப்பெரிய பூதத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த தொழில்துறையும் நசுக்கப்பட்டு, ஏழை, எளிய மக்கள் கடுமையான துல்லிய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் தான் அது போன்ற நிலை மீண்டும் ஒரு முறை நடைபெற்று விடக்கூடாது என்கிற நல்லெண்ண அடிப்படையில் தான் தற்போதைய 144தடை உத்தரவை குறிப்பிட்டு பால்கனி அரசியல் செய்யாதீர்கள் என எங்களது தலைவர் பாரதப் பிரதமருக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

சமூக அக்கறையுள்ள தலைவர் என்பதால் தான் பிரதமர் செய்த நல்ல விசயங்களை பாராட்டிய அதே சமயம் அவர் செய்த தவறையும் சுட்டிக் காட்ட முனைந்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய திரு. கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த, தேசத்தின் மீதும் அக்கறை கொண்ட அந்த கடிதத்திற்கு நீங்கள் வரவேற்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் உங்களது கண்களை தாமரை இலை மறைத்து விட்டதால் அவர் மீது அவதூறுகளை அள்ளி வீசுயுள்ளீர்கள்.

எனவே உடனடியாக உங்களது கருத்துக்களை திரும்ப பெறுவதோடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வலியுறுத்துகிறோம். என அறிக்கை வெளியிட்டுள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!